உங்கள் மாவட்டத்தின் பறவை எது?

டிசம்பர் 16, 2017 அன்று ‘தி இந்து’ நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் வெளியானக் கட்டுரையின் முழு வடிவம்.

எழுத்து: சு.வே. கணேஷ்வர். படங்கள்: வி. சாந்தாராம், மெல்வின் ஜெய்சன், சம்யக் கணின்டே.

இன்று பல மாணவர்கள், இளைஞர்கள் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவது  அனைவரும் அறிந்ததே. அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் பறவை நோக்குதலால் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, இளைஞர்களிடையே பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாக பறவை நோக்குதலும் இடம்பெறத் தொடங்கி உள்ளது. மன ஆரோக்கியம் வாழ்கையின் முக்கிய அம்சம் என்பதால் நம்முடைய பல பொழுதுபோக்குகளில் இயற்கை சார்ந்த ஒரு செயல்பாட்டை வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஹியூம் (இந்தியப் பறவையியலின் தந்தை), ஜெர்டான், ஹாட்ஜ்சன், பிளைத், சாலிம் அலி (இந்தியாவின் பறவை மனிதர்) போன்ற மகோன்னதமான பறவையியல் மேதைகளால் இன்று இந்தியப் பறவையியல் (Indian Ornithology) மகத்துவம் பெற்று விளங்குகிறது. இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள பல பொதுப்பறவைகளைப் பற்றியே முழுமையாகத் தெரியாது. மேலும் நம்முடைய புரிதலிலும் பல வெற்றிடங்கள் உள்ளன. இதை நிரப்ப பல ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் `மாணவர்களுக்காக காத்திருக்கின்றன.

Salim Ali by MNS
‘இந்தியாவின் பறவை மனிதர்’ சாலிம் அலி படம்: வி. சாந்தாராம்/MNS

அண்டார்டிகாவில் உள்ள பறவை என்ன அல்லது உலகின் மிகப் பெரிய பறவை எது என்று கேள்வியை முடிக்கும் முன்னரே, “பெங்குவின் மற்றும் ஆஸ்ட்ரிச்!” என்று நொடிப்பொழுதில் பதிலளிக்கும் குழந்தைகளால் ஏன் வீட்டிற்கு தினமும் வந்து செல்லும் சில பறவைகளின் பெயர்கள் தெரிவதில்லை? குழந்தைகள் படுசுட்டியான திறமைசாலிகள். எதையும் எளிதில் உள்வாங்கக் கூடியவர்கள். ஒரு வினாடி வினா போட்டிக்கு உலகில் பெரியது, சிறியது, நீண்டது, உயர்ந்தது என பல விஷயங்களை சொல்லித்தருகிறோம். அது போலவே நம் இந்தியாவில் உள்ள வளங்களின் பெருமைகளைக் கற்றுத்தர வேண்டும்.

ஒரு பெற்றோரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது “என் பையன் கிளாஸ்ல அஞ்சு ரேங்க்குள்ள வரான். பின்ன எதுக்கு சார் இதெல்லாம் சும்மா. நாலு காசு வருமா இதுல” என்றார். அவர் மட்டுமல்ல இன்று பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலையும் இது போல் தான் உள்ளது.

இந்தப் புள்ளியில் தான் குழந்தைகளுக்கும் இயற்கைக்குமான தொடர்பு வலுவிழக்கத் துவங்குகிறது. வளர்ந்த பின் பலருக்கு இந்தத் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் தான் நம் கண் முன் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தெரிந்தாலும் நமக்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் சர்வசாதாரணமாகக் கடந்து விடுகிறோம். பின் அதன் பொருட்டு ஏற்படும் இன்னல்களுக்கு பிறரை குறை கூறத்துவங்குகிறோம்.

எனவே நம் வீட்டைச் சுற்றியுள்ள வளங்களின் முக்கியத்துவமும் பெருமையும் தெரியவில்லை என்றால் பின் எவ்வாறு அவை சந்திக்கும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றை பாதுகாக்க நம்மால் யோசிக்க முடியும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல அனைவரின்  கூட்டு முயற்சியால் மட்டுமே இயற்கைப் பாதுகாப்பு சாத்தியமாகும்.

மாவட்டப் பறவை

இயற்கைக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பை வலுப்படுத்துவதில் பறவைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எடுத்துக்காட்டாக, உயிரியல் பூங்காக்களில் உள்ள மயில் கூண்டுகளை நோக்கி குழந்தைகள் ஆர்ப்பரிப்போடு ஓடிச்சென்று அதன் அழகை எவ்வளவு ரசிக்கின்றனர் என்பதை எவரால் மறக்க இயலும்? இந்தியாவிற்கு மயில் போல தமிழ்நாட்டிற்கு மரகதப் புறா (Emerald Dove) போல நம் மாவட்டத்திற்கென ஒரு பறவை அமைய வேண்டும். அப்படி அமைந்தால் குழந்தைகளுக்கும் பறவைகளுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தமிழ்நாட்டில் இது வரை அதிகாரப்பூர்வமாக 525 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம் மாநிலத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. எனில் 32 புதிய பறவைகளை குழந்தைகளிடம் அறிமுகம் செய்யும் அற்புதமான வாய்ப்பு நம்மிடையே உள்ளது. இப்படிச்செய்தால் அங்கு வாழும் மக்களுக்கும் தினசரி வாழ்வில் பறவைகளின் முக்கியத்துவம் புரியத் துவங்கும். பறவைப் பார்த்தலும் பறவைகளின் பாதுகாப்பும் தன்னால் நிகழும்.

EMDO மெல்வின்
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா படம்: மெல்வின் ஜெய்சன்

எப்படித் தேர்வு செய்வது? 

சரி, ஒரு மாவட்டத்திற்கான பறவையை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?

மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒன்றாக அந்தப் பறவை இருக்க வேண்டும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஓரிடவாழ்வியாக, அழியும் நிலையில் உள்ள பறவைகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

சேலத்தின் மாவட்டப் பறவை

மேற்கண்டவற்றின் அடிப்படையில் சேலம் மாவட்டத்துக்கான ஒரு பறவையாக, நான் ஒன்றைத் தேர்வு செய்துள்ளேன். இது வரை சேலத்தில் 275க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. அனைத்துப் பறவை இனங்களையும் ஆராய்ந்த பிறகு சேலத்தின் மாவட்டப் பறவையாக பாம்புத்தாராவை (Oriental Darter) நான் பரிந்துரைக்கிறேன்.

ஏன் காகத்தையோ மைனாவையோ கிளியையோ அல்லது கரிச்சானையோ தேர்ந்தெடுக்கவில்லை? தேர்ந்தெடுக்கலாம். அதில் தவறேதுமில்லை.

மரகதப் புறா அனைத்து இடங்களிலும் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இப்போதைக்கு அது அழிவின் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அது ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது என்று யாருக்காவது தெரியுமா எனத் தெரியவில்லை.

இன்றிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து வரும் இளம் பறவை ஆர்வலருக்கு கிளியோ காகமோ தான் அனைத்து இடங்களிலும் உள்ளதே பின் இது ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று எண்ண வாய்ப்புண்டு. மாறாக அழிவை நோக்கி இருக்கும் ஒரு பறவையைத் தேர்வு செய்வதன் வாயிலாக அனைவரின் கவனத்தையும் பங்களிப்பையும் பெற இயலும்.

1 Darter by Samyak Kaninde
பாம்புத்தாரா ORIENTAL DARTER படம்: சம்யக் கணின்டே

குறைந்துவரும் பாம்புத்தாரா

பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலும் மீன்களையே உண்ணும். வேட்டையாடும் போது கழுத்து மட்டும் பாம்பு போல நீருக்கு மேல் தெரியும். அதனாலேயே இப்பெயர் பெற்றது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (International Union for Conservation of Nature & Natural Resources) இப்பறவையை ‘அழிவு நிலைக்கு நெருக்கமாக உள்ள’ (Near Threatened) என அறிவித்திருக்கிறது. தற்போது பாம்புத்தாராவின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரைவில் அழிவின் பாதைக்கு தள்ளப்படலாம் என்று யூகிக்க முடிகிறது. சேலத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் இப்பறவையைக் காண இயலும். மேலும் இதன் கழுத்து “S” வடிவத்தில் இருப்பதால் சேலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.

இது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களும் ஆலோசித்து ஒரு பறவையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டுதோறும் நடைபெறும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பிலும் இது பற்றி ஆலோசிக்கலாம். பிற குழுக்களுடன் இணைந்து தேசிய அளவிலும் இதை செயல்படுத்தலாம்.

இது போன்ற முயற்சிகள் இயற்கையின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கும். மனித குலத்தின் வளமான எதிர்காலத்திற்கு இயற்கை வளம் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து, இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும்!

(சிரமேற்கொண்டு தான் எடுத்த பாம்புத்தாரா படத்தை தந்துதவியதற்காக நண்பர் சம்யக் கணின்டேவுக்கும் கட்டுரையைத் திருத்தி வெளியிட உதவிய வள்ளியப்பன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s